Published Date: January 10, 2023
CATEGORY: ECONOMY

உலகத் தமிழ் முதலீட்டாளர்கள், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் புதிய இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலீட்டாளர்கள் மாநாடு:
வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அவர், உலகத் தமிழ் முதலீடாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட 'குளோபல் தமிழ் ஏஞ்செல்ஸ்' என்ற இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
3-ம் இடத்துக்கு முன்னேற்றம்:
தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில்களுக்குகான முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஆண்டு கிடைத்துள்ளன. இது 2021-ம் ஆண்டை ஒப்பிடும்போது 70 விழுக்காடு அதிகமாகும்.
இந்தியாவில் புத்தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த விழுக்காடு கடந்த ஆண்டு எதிர்மறையாக இருந்தது. அத்தகைய மந்தமான பொருளாதார சூழலிலும் தமிழ்நாட்டின் மீது முதலீடாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது. தொழில்கள் தொடங்கி நடத்துவதற்கான இலகுவான சூழலை அமைத்து இருப்பதிலும் 13-ம் இடத்திலிருந்து 3-ம் இடத்திற்கு தமிழ்நாட்டை நாம் மேம்படுத்தி இருக்கின்றோம்.
ரூ.1000 கோடி பசுமை நிதியம்:
அனைத்து துறை வளர்ச்சியை இலக்காகக் கொண்டது நமது அரசு அதில் தொழில் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான தொழில்களும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் அது பரவ வேண்டும். இதற்காக புத்தொழில் மற்றும் புத்தாக்க துறையிலும் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி ஏற்பட ஏதுவாக வட்டாரப் புத்தொழில் மையங்கள் மதுரை, நெல்லை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உருவாக்கப்பட்டு உள்ளன.
நாட்டிலேயே முதல் முறையாக காலநிலை மாற்றம் காரணமாக உருவாகி உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தரும் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் பொருட்டு ரூ.1000 கோடி பசுமை நிதியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்களும் பெரும் அளவில் பங்கு பெற வேண்டும்.
தமிழ்நாடு முன்னணி ...
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பாக எல்லா தலைமுறையினரின் புத்தொழில் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் உங்கள் அனைவரையும் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இன்றும் நம் அரசின் நிறுவனமான 'டான்சிம்' மூலமாக 'குளோபல் தமிழ் ஏஞ்செல்ஸ்' தளம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
இது உள்ளபடியே எனக்கு பெறுமையாக இருக்கிறது. இதன் மூலம் உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் மாநிலத்தில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமல்லாது, அவர்களுக்கு வழிக்காட்டியாகவும் செயல்பட முடியும். இதற்கான ஒருங்கிணைப்பு சேவைகள் அனைத்தும் 'டான்சிம்' நிறுவனத்தால் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கின்றேன்.
தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்கு பெற வேண்டுமாய் இன்று நல்லதொரு விதை விதைக்கப்பட்டு உள்ளது. அது இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தமிழ்நாடு முன்னணி இடத்தை பெற உதவும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விருப்ப கடிதம்:
நிகழ்ச்சியின் போது அமெரிக்க வாழ் தமிழக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களில் டிசம்பர் 2023-ம் ஆண்டுக்குள் ரூ.16.50 கோடி முதலீடு (அமெரிக்க தமிழ் நிதியம்) செய்வதற்கான விருப்ப கடிதத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், திமுக எம்.பி., என்.ஆர் இளங்கோ, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் இயக்கத்தின் இயக்குனர் சிவராஜா இராமநாதன், வட அமெரிக்கா தமிழ் சங்கத்தின் பேரவை தலைவர் பாலா சாமிநாதன், தொழில் முனைவோர் அமைப்பின் தலைவர் கணபதி முருகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Media: DAILYTHANTHI